மதுரை அருகே சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவானது சோழவந்தான் மந்தை திடலில் நடைபெற்றது.
இதில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் 21 அடி நீளம் அலகு குத்தியும், தீச்சட்டி சுமந்தும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி திருவிழாவைக் காண மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
– அறிவுச்செல்வன்







