தேசிய அளவிலான தலைவர்கள் வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன? திமுகவின் திட்டம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…
திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெருமிதம் கொள்ளும் திமுகவினர்
’இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது. ஆம், இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்கிறார்கள். இது, இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான செயல்களுக்கான தொடக்கமாகவும் அமையப் போவதாக’ திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடைபெறுவது இயல்புதானே, இதில் என்ன சிறப்பு? என்று நீங்க கேட்கலாம்.. பிறந்தநாள் விழாவை மையப்படுத்தி தேசிய அளவிலான தலைவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, தேசிய அளவிலான அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த பொதுக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி கட்டமைப்பை வலுவாக்கும் கூட்டமாகவும் இது அமையும். இது குறித்தெல்லாம் தலைவர்கள் விளக்கமாக பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையும் படியுங்கள்: பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முக்கியத்துவம் பெறும் தலைவர்கள்
குறிப்பாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு எதிரான வலிமையான கூட்டணியை காங்கிரஸ் கட்டமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை காங்கிரஸ் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம் என்று அண்மையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து சத்தீஸ்கரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் கார்கே, ’ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இதற்காக, பாஜகவை வீழ்த்த, எத்தகைய தியாகத்திற்கும் காங்கிரஸ் தயாராக உள்ளது’ என்றார். இது நிதிஷ்குமார் கருத்துக்கு காங்கிரஸ் கொடுத்துள்ள சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. பாஜகவை எதிர்க்கும், பாஜகவால் பாதிக்கப்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணிக்கான காய் நகர்த்தல்கள் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள்.
தயக்கத்தை உடைக்கும் கூட்டம்
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின்தான் முதலில் அறிவித்தார். இது தேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது. இப்போது அதே போன்றதொரு முக்கிய அறிவிப்பு இந்த கூட்டத்திலும் வெளியாகும் என்றும் குறிப்பாக மெகா கூட்டணிக்கான பொதுசெயல்திட்டம் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும் சாத்திய கூறுகளும் இருக்கிறது என்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கூட்டணியில் சேர சில கட்சிகளுக்கு இருக்கும் தயக்கத்தை உடைக்கும் வகையிலான வெளிப்படையான நகர்வுகளும் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பமில்லை. தேர்தலுக்கு பிறகு பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதனையும் படியுங்கள்: முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இது உள்ளது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு செய்து முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து, பின்னர் பிரதமர் தேர்வு குறித்து முடிவு எடுக்கலாம். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களில் இருந்து இந்தியாவை பார்க்கும் அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றுகிறது. அதேநேரத்தில், ’இந்திய அளவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு, சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்’ என்று அக்கட்சியினர் பெருமிதமாக சொல்கிறார்கள். அந்த பெருமிதத்துடன் இந்தியாவின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக, தேசிய முக்கியத்துவம் பெற்ற கட்சியாக திமுக இருக்கும் என கூறும் உடன் திமுக உடன்பிறப்புகள், தமிழ்நாட்டின் திராவிட மாடல் தேசமெங்கும் விரிவடையும் வகையில், பொதுக் கூட்டம் அமையும் என்கிறார்கள். .
தேசிய தலைவர்கள் சங்கமிக்கும் இந்த பொதுக்கூட்டம் தேசத்தை திரும்பி பார்க்க வைக்குமா?
இந்த செய்தி குறித்து காணொளி வாயிலாக காண..