INDIA என்ற கூட்டணியை உருவாக்கியவர் மு.க.ஸ்டாலின் என்றும், அதனால் திமுக குறிவைக்கப்படுவதாக முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக திமுக நாளேடான முரசொலி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
“மூன்றாவது அணி என்பது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பிறகுதான் மூன்றாவது அணி எண்ணத்தில் இருந்து சில தலைவர்கள் மனம் மாறினார்கள். காங்கிரஸையும் உள்ளடக்கிய கூட்டணியால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற சிந்தனையை விதைத்தவர் மு.க.ஸ்டாலின்.
மார்ச் 1 ஆம் தேதி போட்ட விதை என்பது சூலை 18 அன்று முளைத்திருக்கிறது. Indian national developmental inclusive alliance என்பதாக முளைத்திருக்கிறது. INDIA வை – உருவாக்கியவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். இது நம்மை விட பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்கு தெரியும். அதனால்தான் திமுக குறி வைக்கப்படுகிறது. அமலாக்கத்துறையை ஏவி விடுகிறார்கள்.
பெங்களூரு கிளம்பும் முன் ரெய்டு நடத்தினால் பயந்து விடுவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். பாட்னா கூட்டம் முடிந்ததும் மத்தியப்பிரதேசத்துக்குப் போன பிரதமர், அங்கும் தி.மு.க. வை தான் திட்டினார். பெங்களூரு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அந்தமான் விமான நிலைய புதிய முனையத்தை காணொளி மூலமாக தொடங்கி வைக்கும் போதும் தி.மு.க. வையே விமர்சித்தார்.
INDIA வை உருவாக்கியவர் M.K.S. என்பதை அவர் அறிவார். அதனால் தான் இந்தளவுக்கு வன்மம் கக்குகிறார்கள். அமலாக்கத் துறைகளை ஏவுகிறார்கள். அவர்களால் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்’ என்பதை எதிர்கொள்ளும் நெஞ்சுரத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்கள். இத்தகைய கொடுமைகளுக்கான தண்டனைகளும் பா.ஜ.க. வுக்கு நிச்சயம் கிடைக்கும்” என முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.







