தொகுதி மறுவரையறை: திமுக எம்.பி. -க்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதை அடுத்து அந்த கூட்டத்தொடரில் திமுக-வின் செயல்பாடுகள் குறித்தும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயம் வருகை வந்துள்ளனர்.

திமுக-விற்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும் உள்ள நிலையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும் போது நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது. 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது என இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்து இருந்தார், இந்நிலையில் இன்றயை தினம் திமுக எம்பி களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.