இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் 25-வது அமைச்சர்கள் கூட்டம் நிறைவு!

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் மேம்பாட்டிற்காக இந்தியா 5 லட்சம் டாலர் விடுவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (IORA) 25-வது அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உறுப்பு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். மேலும், 2028 முதல் 2032 வரையிலான காலகட்டத்திற்கான IORA அமைப்பின் அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் IORA அமைப்பின் 23 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுத் தலைவர்கள், 12 பேச்சுவார்த்தைக் கூட்டாளி நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அமைப்பின் சிறப்பு நிறுவனங்கள் மற்றும் பார்வையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

IORA அமைப்பின் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், உறுப்பு நாடுகளின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரண்டு சிறப்பு மையங்களை அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, கோவாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (National Institute of Oceanography) IORA டிஜிட்டல் புத்தாக்க மையமும், குஜராத்தில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் கடல்சார் சட்டத்திற்கான IORA சிறப்பு மையமும் அமைக்கப்பட உள்ளன.

மேலும், IORA அமைப்பின் நிறுவன மற்றும் நிதிசார் திறன் மேம்பாட்டிற்காக இந்தியா 5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இதன் மூலம் அமைப்பை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதியாக, 2026ஆம் ஆண்டுக்கான ‘டெல்லி பிரகடனம்’ (Delhi Communiqué 2026) ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் கூட்டம் நிறைவடைந்தது. மேலும், IORA அமைப்பின் நிறுவன மற்றும் நிதிசார் திறன் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா 5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, புதுடெல்லியில் நடைபெற்ற IORA-வின் 25ஆவது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்குவதில் தங்களது உறுதியான ஒத்துழைப்பைத் தொடர்வதாக IORA உறுப்பு நாடுகள் இந்தப் பிரகடனத்தின் மூலம் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.