மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியோடு தங்களது கல்வியை தொடங்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த 2022-ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய பிறகு, அவர்கள் வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தமிழகத்தில்1,543 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள 1,543 அரசுப் பள்ளிகளில், 1,319 பள்ளிகளில் ஜூன்-ஜூலை 2022 உடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. மீதமுள்ள 217 பள்ளிகளில் வருகை முறையில் எந்த மாற்றமும் இல்லை.

உதாரணமாக, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் 100% வருகைப்பதிவு உள்ளது. இந்த மாவட்டங்களைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%) மற்றும் நீலகிரி (96.8%) ஆகியவை உள்ளன.1,086 பள்ளிகளில், வருகை அதிகரிப்பு 20% வரை உள்ளது, அதே நேரத்தில் 22 பள்ளிகள் 40% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.

இதுகுறித்து மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் கூறுகையில், 25 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகள் மற்றும் 75% க்கு மேல் வருகை பதிவாகும் பள்ளிகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் கட்டத்தில் சுமார் 1.14 லட்சம் மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் சுமார் 56,000 மாணவர்களும் என சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்தால் ஒரு மாணவருக்கு ஒரு வேலை உணவுக்கு ₹12.71 செலவாகிறது என்று கூறினார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, இந்தத் திட்டம் பல மையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இறுதியில் பல லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் கட்டட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, நகர்ப்புற மையங்களில் உள்ள மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் உணவு தயாரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பள்ளி வளாகத்திலேயே உணவு சமைக்கப்படுகிறது. இதை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

பல குழந்தைகள் காலை உணவைத் தவிர்த்துவிட்டு அதிகாலையில் பள்ளிக்கு வருகின்றனர். அதனாலையே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில், மாணவர்களுக்கு காலையில் சத்தான உணவுகள் கிடைப்பது இல்லை. பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க காலை உணவை நன்றாக சாப்பிட வேண்டும். அவர்கள் பசியோடு இருக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். நிச்சயம் இது மேலும் வெற்றியடையும் என்று நம்புவதாகவும் திரு. ஜெயரஞ்சன் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.