லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார் – டெல்லி அணி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக டெல்லி அணி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இலக்கை விரட்டி களமிறங்கிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

போட்டியின் நடுவே பஞ்சாப் அணி வீரர் பிரியன்ஷ் ஆர்யா அடித்த பந்தை பவுண்டரி எல்லை அருகே டெல்லி அணி வீரர் லுங்கி இங்கிடி கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால் பின்னோக்கி ஓடிய அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மைதானத்திலேயே வலியால் துடித்த அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவக் குழு விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் ஆட்டமும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் லுங்கி இங்கிடி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், லுங்கி இங்கிடி தற்போது நலமுடன் உள்ளதாக டெல்லி அணி தெரிவித்துள்ளது. லுங்கி இங்கிடியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும். விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.