ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு துணைபோவது போல் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியை, முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை வாலிபால் விளையாடி தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களிடையே போதைப்பொருள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
போதைப்பொருளை தடுக்க காவல்துறையை சுகந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உரிய சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும்.
இன்னமும் ஆன்லைன் ரம்மிக்கு குழு போடுகிற மற்றும் கருத்து கேட்கிற அரசாக திமுக அரசு உள்ளது என விமர்சனம் செய்தார். இது நாடறிந்த சூதாட்டம் ஏற்கனவே தடை சட்டம் போடப்பட்டுள்ளது என கூறினார்.
நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைத்து வாதாட முடியாத காரணத்தினால், வழக்கை சரியாக முன்னெடுக்கவில்லை. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு காலம் தாழ்த்துவதை பார்த்தால் இந்த அரசு அதற்கு உடந்தையாக உள்ளதா என்ற அச்சமும் ஐயமும் உள்ளது என்றார். உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அமைச்சர்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வது மரபு.
நிதியமைச்சரின் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி பாஜக தொண்டர்களிடையே உணர்ச்சியை கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நிதியமைச்சர் வார்த்தையை கடுஞ்சொல்லாக நினைத்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்று இதுவரை நடைபெற்றதில்லை என கூறிய அவர், துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறினார்.
உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. கசப்பான நிகழ்வு இது. நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் நடைபெற்றது. அந்த நிகழ்வால் மனம் வேதனைப்பட்டதாக சரவணன் தெரிவித்துள்ளார். மதுரையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது. மருத்துவர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








