மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத், இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் குட் நைட். இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். குறட்டை பிரச்சனை கொண்ட ஹீரோ, தன்னை ராசி இல்லாதவள் என நினைக்கும் கதாநாயகி, இவர்களின் குடும்ப உறவு முறை, நட்பு, அதில் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக்காட்டும் திரைப்படமாக ’குட் நைட்’ அமைந்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தை குட் நைட் திரைப்படம் பெற்று வருகிறது. நகைச்சுவையுடன் கதை நகர்ந்து செல்வதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/Dir_Lokesh/status/1659174698570371072?t=CnfGnlWnOvim8SGSMr40vQ&s=08
இந்நிலையில் ’குட் நைட்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குட் நைட் படத்தை பார்த்தேன். இப்படம் கலகலப்பாக, மனதிற்கு பிடித்தமானதாக, உணர்வுப்பூர்வமாக, மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. நான் படத்தை முழுவதுமாக ரசித்தேன். மணிகண்டனும், மற்ற நடிகர்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், மகேஷ், நடிகர் ரமேஷ் திலக் என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.







