அதானி குழுமத்தின் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ஆம் நாள் அமர்வு இன்று கூடியது. அவை தொடங்கியதும் அதானி குழும மோசடி குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் முடங்கின.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கண்டன முழக்கமிடத் தொடங்கினர். இதனால், நாடாளுமன்ற அவைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், மீண்டும் அவை கூடியபோது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து இன்று நாள் முழுக்க அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
-ம.பவித்ரா








