சிறிது நேரம் அமைதி காக்கவும் என ஆளுநர் ரவிக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்!

பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது என ஆளுநர் ரவி பேசியிருந்த நிலையில், மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.…

பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது என ஆளுநர் ரவி பேசியிருந்த நிலையில், மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் அவ்விழாவில் பேசிய அவர் ”தமிழ்நாடு என்று நாம் இன்று சொல்லும் இந்த பகுதி புனிதமான ஒரு இடம். மனித நேயத்திற்காக ராகவேந்திரா வாழ்ந்தார். இங்கு பல ஆன்மிக சிந்தனையாளர்கள் உருவாகி உள்ளனர். சனாதன தர்மம் துவங்கவும் பாரத் என்ற இந்த நாடு உருவாகவும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவிற்கு அறிமுகம் தேவைப்படுகிறது, ஆனால் பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை.

ஆங்கிலேயர்கள் பெயர் வைத்ததால் தான் இந்தியா என்ற பெயர் உருவானது. அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் INDIA IS BHARAT என கூறப்பட்டுள்ளது. சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்துகிறது, பாகுபாடை வலியுறுத்துகிறது என பலர் கூறுகின்றனர். சனாதன தர்மம் மனிதர்கள் இடையே தீண்டாமையை ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

இந்த நாடு 1947-ம் ஆண்டு உருவானது என பலர் நினைக்கின்றனர், இது மிகவும் நகைச்சுவையான ஒன்று. இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ தெரிவித்துள்ளார்.  சனாதன தர்மம் இந்த உலகம் ஒரு குடும்பம் என கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

இந்த நாடு சனாதன தர்மத்தை தொடர்ந்து எடுத்து கொண்டு வந்துள்ளது. 10000 ஆண்டுகளாக இந்த நாட்டில் இந்த வாழ்க்கை முறை உள்ளது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு வாழ்க்கை முறை இல்லை. தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை.

கடவுளை வழிபடுவது மட்டுமே மடங்களில் கல்வியாக கற்பிக்கப்படுகிறது என பலர் நினைக்கின்றனர். மடங்களில் கடவுளை வணங்குவது என்பது ஒரு வேளை மட்டுமே. கல்வி, மக்கள் சேவை, பொது சேவை என அனைத்தையும் இதுபோன்ற மடங்கள் கற்பித்து வந்தன. இதனை நாம் இழந்த பின்புதான் அனைத்தையும் அரசிடம் எதிர்பார்த்து வருகிறோம்.

உலகம் முழுவதும் பல பிரச்சினைகள் தற்போது எழுந்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இந்தியாவில் உள்ளது. அதற்கு இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மீகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். பாரத் என்றால் என்ன என புரிந்து கொண்டுள்ள நபர் பிரதமர் மோடி. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதான தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. இதனை ஏற்கவில்லை என கூறும் நபர்களும் இதில் பயணம் செய்வார்கள்.” இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள மக்களவை உறுப்பினர் கனிமொழி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை எனக் கூறியுள்ளார். அதோடு வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது.

அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை! நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.