விசாரணை கைதி விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தெர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலும் சென்று போலீசாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய அவர்கள் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், விசாரணை கைதி – விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. விக்னேஷுடன் கைதான சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து நீதிமன்றத்தின் வாயிலாக அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கும், சாட்சியான ஆட்டோ ஓட்டுனருக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த பரிந்துரையில் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு சிறப்பு மருத்துவமனையில் சுரேஷுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் சென்னை ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும், ஐஐடி சென்னை இயக்குனருக்கும் பரிந்துரை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களை ஐஐடி சென்னையிலிருந்து ஆய்வு படிப்பு மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும்,குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட துறைசார் நடவடிக்கை அறிக்கையை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை அவர் ஆராய்ச்சி பட்டத்தை முடிக்கும் வரை நீட்டிக்க வேண்டும். விசாரணையை விரைவுபடுத்தி, அதுதொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். போன்ற பரிந்துரைகளை தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் செய்துள்ளது.