2020ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் இந்திய பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அனைத்து பிரிவு பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். வேளாண் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இது பெண்களின் ஊட்டச்சத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஊரடங்கின் போது பெண்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. டாடா கார்னல் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு ஜர்னல் எக்கனாமியா பொலிட்டியா இதழில் வெளியாகியுள்ளது. அதில், பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு நுண்ணூட்டச் சத்து அதிகம் உள்ள இறைச்சி, முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களை குறைவாக உட்கொண்டதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வானது 155 வீடுகளில் உள்ள பெண்களிடம் எடுக்கப்பட்டது. அதில் 72 சதவீதம் பேர் ஊரடங்கின் போது அங்கன்வாடி சேவைகளைப் பெற இயலவில்லை என்று கூறினர். ஏனெனில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலமாக சத்துமாவு, முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் குறைவான அளவு உணவையே உட்கொண்டதாகவும் மற்றும் 95 சதவீதம் பேர் தாங்கள் குறைந்த உணவு வகைகளையே சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர். ஊரடங்கின் போது வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிறுவனம் இதற்கு முன்பு எடுத்த ஆய்வின் முடிவில், இந்திய பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ளவர்களை விட குறைவான உணவுகளை சாப்பிடுவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– கிருத்திகா நடராஜ்








