9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 6,228 போலீசாரும் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் அறைகளில் அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோரை தவிர பொதுமக்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் https://tnsec.tn.nic.in இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.







