ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களில் பெறப்பட்ட 98,151 வேட்பு மனுக்களில் 1,166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,571 பேர் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். 2,981 பணியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுஇடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்பான வரையறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுஇடங்களில் சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமையாளரின் அனுமதி இருந்தாலும், சுவரில் எழுதவோ, சுவரொட்டி போன்றவற்றை பயன்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.







