நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாமக 5 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி யாரோடும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட உள்ளதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்பியுமான அன்புமணி ராமதாஸ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார் இன்று முதல்வராகிவிட்டார். கடந்த 50 ஆண்டுகாலமாக அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சியமைக்கிறது. இதற்கு பிறகு பாமகவை தவிர யாரும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்பதை இந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் பெறும் வெற்றி மூலம் காட்ட வேண்டும். மேலும், அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.







