தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில், பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை என்றும், சட்டத்தை மீறி தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை முடித்து வைத்தார்.