இரு கைகளும் கால்களும் செயலிழந்த நிலையில் வீட்டிலேயே வசிக்கும் சிறுமி, பள்ளிக்கூடம் செல்ல முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என நியூஸ் 7 தமிழ் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற குழந்தைகளைப் போல, படிக்க, விளையாட, இயல்பாக இருக்க, இப்படி ஏராளமான கனவுகளை சுமந்துக்கொண்டிருக்கும் இந்த சிறுமிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நோய், மருத்துவத்துறைக்கே சவாலாக இருக்கிறது. பெற்றோரால் முடிந்தவரை அரசு மருத்துவமனைகளை அணுகி, மருத்துவம் பார்த்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணி அடிமை – ஜெனிட்டா தம்பதியர். அந்தோணி அடிமை மீன்பிடி தொழில் செய்து குடும்பத்தைப் பார்த்து வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் மேக்சி அனிட்டா மோளுக்கு தற்போது 14 வயது ஆகிறது. இவர், இரண்டு வயது இருக்கும் போதே அரியவகை எலும்பு உடைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சுமார் 10 லட்சத்திற்கு அதிகமாகக் கடன் வாங்கி, செலவு செய்து சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. 18 முறை ஏற்பட்ட எலும்பு உடைவால் தற்போது கை கால்கள் செயலிழந்து வீட்டில் முடங்கியிருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்த அனிட்டா மோள், தற்போது முற்றிலும் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். நோயைக் குணப்படுத்தவும், சிறுமி பள்ளிக்கு செல்லவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.
கல்வி கனவுகளை சுமந்துகொண்டு மருத்துவ உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ள மாணவிக்கு அரசு உதவ வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.







