நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை; நடிகர் பாக்யராஜ் வெளிநடப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்படும் வாக்குகளுக்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாக நடிகர் பாக்யராஜ் அணி குற்றம்சாட்டியது. மேலும், வாக்கு எண்ணிக்கையில் தங்களுக்குத் திருப்தி இல்லை எனக்கூறி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினர்.

இதனிடையே பாண்டவர் அணி சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகரும், இயக்குநருமான மனோபாலா, வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் இல்லாமல் சுமுகமாக நடைபெற்றதாகக் கூறினார். எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணி முன்னிலை வகித்து வருவதாகவும் மனோபாலா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.