பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கிராமத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவ, மாணவிகள், தங்களுக்கு தாங்களே பாடம் கற்பித்து, கல்வி பயிலும் அவலம் நிலவுகிறது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை கீழே காணலாம்.
பெரம்பலூர் மாவட்டம், எலந்தலப்பட்டி ஊராட்சியில் உள்ளது அடைக்கம்பட்டி கிராமம். இங்கு, 1954ம் ஆண்டு முதல் நேதாஜி மானிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிக்குச் செல்ல இன்று வரை சாலை வசதி இல்லை. இதனால், விவசாயம் நடைபெறாத நிலத்தின் வரப்பு பாதையையே பள்ளிக்குச் செல்லும் வழியாக மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அடைக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால், நீர்நிலைகள் நிரம்பி, மீண்டும் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மாணவ மாணவிகள் பள்ளிக்கு, வயல் வரப்பிலும், தண்ணீரிலும் இறங்கி நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம் எனக் கூறி, கிராம மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், கிராமத்திலுள்ள மரத்தடியில் அமர்ந்து, மாணவ மாணவிகள் தாங்களாகவே படித்து வருகின்றனர்.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அடைக்கம்பட்டி கிராம மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.








