உலகில் நீண்டகாலம் அரச பதவியில் இருந்தவர் என்ற பெருமைக்குரிய இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்போம்…
1952ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து ராணியாக, இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட விழாவை தொலைக்காட்சியில் 2 கோடி பேர் பார்வையிட்டனர். தன் ஒட்டுமொத்த வாழ்வையும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி தனது பொது வாழ்வைத் தொடங்கிய ராணி எலிசபெத், இறுதி வரை அதன்படியே வாழ்ந்தார்.
அரச குடும்பத்தினர் வரி செலுத்த தேவையில்லை என்ற மரபை உடைத்து 1992ம் ஆண்டு முதன்முறையாக வரி செலுத்தினார். தனது ஆதிக்கத்தில் உள்ள கிட்டத்தட்ட 15 நாடுகளின் ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும், நிலங்களை கைப்பற்றும் அதிகாரமும் அவருக்கு இருந்தது. இவ்வளவு ஏன்.., எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் அதிகாரம் கூட இருந்த போதும் ஒரு முறை கூட அவர் இத்தகைய அதிகாரங்களை பயன்படுத்தியதில்லை. அவரது ஆளுகைக்குட்பட்ட ஸ்காட்லாந்து தனி நாடு கோரிக்கை வைத்தபோது பொது வாக்கெடுப்பு மூலமாகவே ஜனநாயகப்பூர்வமாக அதை நிறைவேற்றினார்.
எந்த பெண்ணாவது அதிகம் கேள்வி கேட்டால் நீ என்ன பெரிய எலிசபெத் மகாராணியா? என்று கேட்கும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்து இயங்கியவர். அரச குடும்பத்திற்கும் அரண்மனை செலவினங்களுக்கும் தேவையான நிதியை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் 300 ஆண்டுகால முறையை 2012ம் ஆண்டு மாற்றினார் எலிசபெத். பல முறை இவரைக் கொல்வதற்கான முயற்சிகளும் நடைபெற்றன.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இங்கிலாந்தில் வாகனங்களை இயக்குவது, பாஸ்போர்ட்டே இல்லாமல் எந்த நாட்டிற்கும் சென்று வருவது என இவருக்கு சிறப்பு அதிகாரங்கள் பல உண்டு.
நவீன யுகத்திற்கு ஏற்றாற்போல், தன்னை தகவமைத்துக்கொள்ளும் தன்மையை கொண்டிருந்தார் எலிசபெத். 1976ம் ஆண்டு ராணுவம் தொடர்பான தகவல்களை முதன்முதலில் இ-மெயில் மூலம் அனுப்பியதில் தொடங்கி, 2019ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியவது வரை, சமகால தொழில்நுட்பத்தில் அப்டேட்டாக இருந்தார்.
மிக அதிகமான வெளிநாடுகளுக்குச் சென்ற ராணியும் இவரே. குறிப்பாக, இந்தியாவுக்கும் ராணி 2ம் எலிசபெத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதுவரை 3 முறை அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார். 1961ஆம் ஆண்டு முதன் முறையாக இந்தியா வந்தபோது, டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
2வது முறையாக 1983ம் ஆண்டு இந்தியா வந்த போது ஆக்ரா, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
கடைசியாக 1997ம் ஆண்டில்தான் அவர் இந்தியாவுக்கு வந்தார். அது இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பெருமை மிகுந்த ஒரு தருணமாகவே அமைந்தது. கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பை அவர் துவங்கி வைத்தார்.
தாயின் பெயர் எலிசபெத் என்பதால் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி என அழைக்கப்பட்டார். இளம் வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் என்றால் ராணி எலிசபெத்திற்கு மிகுந்த பிரியம். புறா பந்தயம், கால்பந்து விளையாடுவது, குதிரை ஓட்டுவது உள்ளிட்டவை இவரது பொழுபோக்குகள் ஆகும்.
எலிசபெத் அதிகம் பேசாத இயல்பு கொண்டவர். அதன் காரணமாகவே, தனது ஆட்சியாளர்கள் மீதான விமர்சனத்தையும் வெளிப்படுத்தாமலேயே இருந்தார். அதேநேரம், மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார். சில சமயங்களில் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லும் எலிசபெத் பொதுமக்களுடன் உரையாடுவார். அப்போது பொதுமக்கள் யாராவது நீங்கள் ராணியை நேரில் பார்த்துள்ளீர்களா? என கேட்டால், நான் பார்த்ததில்லை ஆனால், இவர் பார்த்துள்ளார் என, தனது பாதுகாவலரை நோக்கி கை காட்டுவாராம்!
சார்லஸ்-டயானா தம்பதியினரின் பிரிவைத் தொடர்ந்து டயானாவின் மர்ம மரணம் குறித்த ராணி எலிசபெத்தின் மவுனம் அவர் மீதான கடும் விமர்சனத்திற்கு வழி வகுத்தது. 2002ம் ஆண்டு சகோதரி மற்றும் தாயின் இழப்பால் மிகுந்த வேதனைக்குள்ளானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்தபோது எலிசபெத்தின் உயிர் பிரிந்தது.
இதையும் படியுங்கள்: இங்கிலாந்தின் புதிய அரசரானார் சார்லஸ்!
1874இல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி, 1975இல் பிறந்த தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ்ஸை புதிய பிரதமராக நியமித்தது வரை, 15 பிரதமர்களைக் கண்டவர் ராணி 2ம் எலிசபெத். வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்த பெருமையை பெற்ற அவர், ஆட்சிக்காலம் முழுவதும் தன் நாட்டு பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளையும் நடத்தி வந்தார்.
உலகையே அடக்கி ஆள நினைத்த நாட்டிலிருந்து வந்த ஜனநாயக விரும்பியான 2ம் எலிசபெத், இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் மனதிலும் சிம்மாசனமிட்டே அமர்ந்துள்ளார்.
-ராணி கார்த்தி












