பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் செயல்படவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் தன்னை பழைய பாசத்துடன் அண்ணன் என்று அழைத்துள்ளார் என்றும் பழைய பகை கசப்பு உணர்வுகளை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடலாம் என்றும் கூறினார்.
ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார். இதனால் ஒரே கட்சியில் சேரவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். 8 வழிச்சாலை எந்த வகையில் வந்தாலும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தருவோம் என்று கூறினார்.
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தினால்மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் நீண்ட நாளாக இருக்கும் மொய்விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார் என சாடினார். அவர் சொல்வது தவறு, வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது ஆகும். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அவருக்கு எதுவும் தெரியாது.
மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது, அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதால் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சமையல் எரிவாயு விலை பாஜக ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வரியை குறைக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிலளித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாக பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








