நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்றுவரை மனிதச் சமூகத்திற்கான நீதியையே உலகின் மற்ற இனங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உயிர்மநேயம் பாடிய உயர் தமிழன்..!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்று பாடிய உலகின் முதல் பொதுவுடைமை சிந்தனையாளன்..!
‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’ என்று நாட்டில் வாழும் எளிய வேளாண் குடிமகன் முதல், ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்’ என்று நாட்டை ஆளும் பேரரசன் வரை அனைவருக்கும் வாழ்வியல் நீதி வகுத்த பேராசான்!
இல்லறம், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், அடக்கமுடைமை, நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை, சான்றாண்மை, கல்வி, கேள்வி, ஈகை, புகழ், வாய்மை, வெகுளாமை, நிலையாமை, துறவு, கல்வி, கேள்வி, வலியறிதல், இடனறிதல், காலமறிதல், குறிப்பறிதல், அவையறிதல், கொடுங்கோன்மை, செங்கோன்மை, சொல்வன்மை, அமைச்சு, நாடு, அரண், குடிமை, மானம், பெருமை, ஒற்றாடல், படைமாட்சி, படைச்செருக்கு, இடுக்கண் அழியாமை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, மருந்து, உழவு காதற் சிறப்புரைத்தல், கனவுநிலையுரைத்தல், ஊடலுவகை என்பன உள்ளிட்ட 133 அதிகாரங்களாக தொகுத்து, மனித வாழ்வியலை அறம், பொருள், இன்பம் என்று வகுத்து உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







