தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள், இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி, 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தம் 601 காளைகள் களம் கண்ட நிலையில் 112 பிடிபட்டுள்ளது.
இறுதிச்சுற்றுக்கு தேர்வான மொத்த மாடுபிடி வீரர்கள் : 11
முன்னிலையில் உள்ள வீரர்கள்:
அஜித் (221) – 12
பிரபாகரன் (118) – 11
கார்த்தி (289) – 11
6ம் சுற்றில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள்:
கார்த்தி (289) – 11
பார்த்திபன் (268) – 8
கௌதம் (252) – 4
மணிகண்டராஜா (272) – 2
இதனை தொடர்ந்து 7வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் அதிக காளைகளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.







