பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா அளவில் தயாராகும் இந்த படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘Slum Dog – 33 Temple Road’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.







