சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கலந்து கொண்டனர்.மாநாட்டினை முடித்துவிட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கனடாவில் நடைபெற்ற 65-வது மாநாட்டில் கலந்து கொள்ளப் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு. மிக அருமையாக சிறப்பாக காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெற்றது. பாராளுமன்றத்தின் நடைமுறைகள், மேம்பாட்டு நடவடிக்கைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் பதவியேற்ற பின் முதல் வரவு செலவு திட்டத்தை காகிதம் இல்லாத
பட்ஜெட்டாக நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழகத்தில் கேள்வி நேரம் நேரலையாக
ஒளிப்பரப்பட்டு வருகிறது. சட்டமன்றம் ஆரம்பித்த 1921ம் ஆண்டு முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது வினா விடை நேரம் மட்டுமே நேரலை ஒளிபரப்பு
செய்யப்படுவது போல் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடி சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததாக தெரியவந்தது. அந்த அடிப்படையில் தான் சீனாவில் கொடிகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்திய பெருங்கடல் அமைதியாக தான் இருந்தது. ஆனால் சீன உளவு கப்பல் வந்தது வேதனையானது மட்டுமின்றி அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த நிலையில் சீனாவில் இருந்து தேசிய கொடியை இறக்குமதி செய்வது வேதனைக்குரியது. மாநாட்டில் சபாநாயகர்கள் தேசிய கொடி ஏந்தி சென்ற போது தான் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். பாராளுமன்ற சபாநாயகரிடம் எல்லாரும் தெரிவித்தோம் என கூறினார்.







