தமிழை இலக்கண பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்
என உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முடிகொண்டான் தமிழ் சங்கம்
சார்பில் முடிகொண்டான் விருதுகள் வழங்கும் விழா மற்றும் தொல்லியல்
கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவிற்கு உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கி முடிகொண்டான்
மொழி அறிஞர் விருதினை செம்மொழி ராமசாமிக்கும் முடிகொண்டான் பாவலர் விருதினை கவிஞர் பழமலய்க்கும் வழங்கி அவர்களை கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், “தமிழ் மொழி பழமையான
மொழி என்பது நாம் அனைவருக்கும் தெரியும் தமிழ் மொழி செம்மொழியான பின்பு
வெளிநாட்டவர்களும் தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டி வருவது நாம் அனைவருக்கும்
பெருமையாகும். தமிழ் மொழியை இலக்கண பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக்
கொள்வது முக்கியமாகும். ஒரு எழுத்து மாறினாலும் அதன் அர்த்தமே மாறிவிடும்
என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மொழி
குறித்த ஆராய்ச்சிக்கும் பலர் தங்களது பங்கை ஆற்றி வருகின்றனர்” என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் கீழடி அகழ்வாராய்ச்சியும் தமிழர் வாழ்வியல் குறித்தும் தமிழக காசுகள் குறித்து
தமிழக நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமனும் தொல்லியல் நோக்கில் சிதம்பர
நகரம் குறித்து குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்
சிவராம கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் அரியலூர் மாவட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








