எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசுகையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்துள்ளது. பொதுக் குழுவில் இதுதொடர்பான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. 90% மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமையையே எதிர்பார்க்கின்றனர். 2019ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின்கீழ் கட்சி வர வேண்டும் என்றுதான் கூறினேன். பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்று அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.
நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓபிஎஸ்.யிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிகாரப்பூகர்வமான கூட்டம் இல்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அம்மாள் கட்சியை பெருந்தன்மையாக ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்ததுபோல திறமையானவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.
கட்சியை காப்பாற்றும் ஒருவருக்காக, மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும். போராட்டத்தின் மூலம் கிடைக்கும் தலைவர்களையே அதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா







