குஜராத் மாநிலம் வதோதராவில் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நிறைவடைந்த பல்வேறு ரயில்வே திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டார். இரட்டை என்ஜின் பொறுத்தப்பட்ட வேகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, பெண்கள் முன்னேற்றத்தை உறுதிசெய்துள்ளதாகக் கூறினார். அவர்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தவிர்க்க முடியாதது எனக் கூறிய பிரதமர் மோடி, ராணுவம் முதல் சுரங்கத்துறை வரை பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு கொள்கைகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாகக் கூறினார்.
பெண்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை மனதில் கொண்டு இந்தியா முடிவுகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 21ம் நூற்றாண்டில் இந்தியா வேகமான வளர்ச்சியை அடைவதற்கு பெண்களின் வாழ்க்கை தரத்தை வேகமாக முன்னேற்றுவதும், அவர்களை அதிகாரமுடையவர்களாக ஆக்குவதும் மிகவும் அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.







