மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தீவிர சிவ பக்தரான இவர் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைபிரலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இதனையும் படியுங்கள் : மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?
இதனைத் தொடர்ந்து இன்றுகாலை மயில் சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு, இயக்குனர் லிங்குசாமி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மேள தாளங்கள் முழங்கியும் , சிவ புராணம் பாடியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையும் படியுங்கள் : ஏழ்மையிலும் ஏழ்மையை போக்க உதவிய மயில்சாமி
இதனையடுத்து சாலிகிராமத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கனக்கோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஏவிஎம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வழி நெடுக மக்கள் நின்று கண்ணீர் மல்க அவரது உடலுக்கு பிரியா விடை கொடுத்தனர்.
– யாழன்







