முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்; உதயநிதிக்கு எந்த துறை? ஆலோசனை தீவிரம்

தமிழ்நாட்டின் அமைச்சராக டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களை கடந்துள்ள நிலையில் அமைச்சரவையில் ஒரு முறை மட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மட்டும் மாற்றப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வந்த சிறப்பு முயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை அமைச்சர் கவனித்து வந்த வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்கள் ஆகியவை உதயநிதிக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி வசம் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை அமைச்சராகவுள்ள பெரியகருப்பனிடம் கூட்டுறவுத் துறையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும், அமைச்சர் ராமச்சந்திரனிடம் உள்ள வனத்துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் 34 அமைச்சர்கள் உள்ள நிலையில், 35வது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கிறார். அவருக்கு தலைமைச்செயலகத்தில் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு முயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கத்தின் கீழ் மாநில திட்டக்குழு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்களில் சுய உதவிக் குழு இயக்கம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்வாதார மேம்பாடு, மகளிர் சுய உதவிக்குழுத் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் பயிற்சி ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

  • இலா. தேவா இக்னேசியஸ் சிரில், தலைமை செய்தியாளர் நியூஸ் 7 தமிழ்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு

EZHILARASAN D

தேர் விபத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி

G SaravanaKumar

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

Niruban Chakkaaravarthi