மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் கடைசி நிமிடங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். நீண்டகாலமாக மன அழுத்தத்தில் இருந்ததால தூக்கம் வராமல் தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும், தனிப்பட்ட பிரச்னைகளால் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயகுமாரின் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவரின் தனி பாதுகாவலர் ரவிச்சந்திரன் அளித்த புகார் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஐஜி விஜயகுமாரின் கடைசி நிமிடங்கள் :
- கோவை சரக டிஐஜியாக விஜயகுமார் பொறுப்பேற்ற ஜனவரி மாதத்திலிருந்தே சரியான தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரை உட்கொண்டு வந்ததாக FIR ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வழக்கமாக DSR அறைக்கு 7 மணிக்கு வரும் விஜயகுமார் சம்பவம் நடந்த 7 ஆம் தேதி காலை 6.30 மணிக்கே வந்துள்ளார்.
- முகாம் அலுவலகத்தில் அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு விஜயகுமார் பால் கேட்டுள்ளார். காவலர் ரவிவர்மா காய்ச்சி கொடுத்த பாலை குடித்துள்ளார்.
- காலை 6.40 மணியளவில் தனிப்பாதுகாவலர் ரவிச்சந்திரன் தங்கியிருக்கும் அறைக்கு டிஐஜி விஜயகுமார் சென்றுள்ளார்.
- இதன் பின்னர் ரவிச்சந்திரனின் துப்பாக்கியை எடுத்து அதனை எவ்வாறு பயன்படுத்துவது என பேசிக் கொண்டே டிஐஜி விஜயகுமார் வெளியே சென்றுள்ளார்.
- திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் பாதுகாவலர் ரவிச்சந்திரனும், முகாம் அலுவலக ஓட்டுநர் அன்பழகனும் ஓடி சென்று பார்த்தபோது டிஐஜி விஜயகுமார் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

- இந்த அதிர்ச்சிகரமான தகவலை விஜயகுமாரின் மனைவியிடம் ரவிச்சந்திரன் தெரிவித்த பின்னர் அதே நேரத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு காலை 7 மணியளவில் விஜயகுமார் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
- மருத்துவமனையில் மருத்துவர்கள் விஜயகுமார் இறந்துவிட்டதை உறுதி செய்த நிலையில், என்ன காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற விவரங்கள் தெரியவில்லை என அவரின் தனிப்பாதுகாவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.








