மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளையொட்டி மொழிக் காவலர்கள் உருவப் படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்தி திணிப்பை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமானது ஜனவரி 25ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தவகையில் இன்று மாநிலம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அரசியல் தலைவர்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் படத்தை பார்வையிட்ட பிறகு, திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சுவாமிநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.