நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்று கொண்டார்.
ஜெசிந்தா அர்டெர்னின் பிரதமர் பதவிக்காலம் மீதமுள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெளிநாடுகளுடன் நல்ல உறவைப் பேணிக்காத்து வந்த ஜெசிந்தா திடீரென ராஜினாமா செய்வதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஜெசிந்தா ஆர்டெர்ன் திறம்பட கையாண்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சி கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, இன்று கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக பதவியேற்று கொண்டார். வரும் அக்டோபர் மாதம் பிரதமருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை பிரதமர் பொறுப்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி வகிப்பார்.
பதவியேற்பு விழாவுக்கு பிறகு கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், இது எனது வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு. எதிர்வரும் சவால்களை ஏற்க நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் என்று கூறினார். கிறிஸ் ஹிப்கின்ஸ் கோவிட் தடுப்பு பொறுப்பு அமைச்சராக இரு ஆண்டுகள் பணிபுரிந்தவர். கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தியதில் இவர் பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கல்வி அமைச்சர், பொதுச்சேவை அமைச்சராகவும் இருந்துள்ளார்.