ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த இபிஎஸ்

 ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து எடப்பாடி…

 ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. இதனிடையே இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேசிய எடப்பாடி பழனிசாமி, ”அதிமுகவை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதனை தடுக்கும் போது சில பிரச்னைகள் உருவாகின்றன. இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம். பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது” என்றார்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும், பொதுக்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் நியமன உறுப்பினர்கள் அல்ல. கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற அவர், “ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவை கூட்டக்கூடாது என காவல்துறைக்கு கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ். நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்” என்று குற்றம்சாட்டினார்.

ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, “அவர் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றோரா அவர்களை அழைப்பார். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், இப்போது அவரை அழைப்பது ஏன்? அவருடைய மகன் மத்திய அமைச்சர் ஆக வேண்டும், வேறு யாரைப் பற்றியும் ஓபிஎஸ்க்கு கவலையில்லை.

ரவுடிகளை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சூறையாடியவர் ஓ.பன்னீர்செல்வம். தலைமை அலுவலக ஆவணங்களை திருடிச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எப்படி செயல்பட முடியும். திமுகவுடன் தொடர்பு வைத்துள்ளார் ஓபிஎஸ். ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன், சிறப்பாக ஆட்சி நடத்துகிறீர்கள் என பாராட்டியுள்ளார்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.