பார்வை உள்ளவர்களையே கதி கலங்கச் செய்யும் மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் பணியை, பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் விரைவாக பழுது நீக்கி அசத்தி வருகிறார். அசாத்திய திறமையால் பலரது பாராட்டையும் பெற்ற அந்த இளைஞர் யார்? விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(32). 6 வயதில் ஏற்பட்ட மூளை காய்ச்சலால் பார்வையை இழந்த சுரேஷ், அரசு பார்வையற்றோர் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதலே மின்சாதன பொருட்கள் பணியில் ஆர்வம் கொண்டிருந்த சுரேஷ், பார்வையை இழந்த சில ஆண்டுகளிலேயே தந்தையையும் இழந்தார். பார்வையிழப்பு ஒரு புறம், தந்தையின் இறப்பால் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை ஒருபுறம் இருக்க, அந்த நேரம் செய்வதறியது மன உளைச்சலுக்கு ஆளாகி தன்னிடம் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்.
இந்த நிலையில் சுரேஷின் சகோதரி ரேவதி தனது தம்பியிடம் மின்சாதன பொருட்கள் தொடர்பான ஆர்வத்தை பார்த்து, சரவணம்பட்டி பகுதியில் உள்ள எலெக்டிரிக்கல் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை வாங்கி எழுதுவது, கடையில் யாரும் இல்லாத போது பார்த்துக் கொள்வது என இருந்துள்ளார்.
அப்போது தனது மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதில் உள்ள ஆர்வத்தை கடை உரிமையாளரிடம் கூறியதால் சிறு சிறு வேலைகளை அவர் கற்றுக்கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கவனம் செலுத்தி பழகிய சுரேஷ்குமார் ஒரு கட்டத்தில் தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் மிக்ஸி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, வாஷிங் மெசின், அயன் பாக்ஸ், ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதன பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்யத்துவங்கினார்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இல்லாமல் மின் சாதன பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வரும் சுரேஷ்குமார், தனது வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றை சமாளித்து வருகிறார். இவரது தன்னம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக அவரது அக்கா ரேவதியின் முயற்சியாக கவுண்டம்பாளையம் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த 6 மாதங்களாக தனது சொந்த கடையை நடத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் தயங்கிய வாடிக்கையாளர்கள் சுரேஷ்குமாரின் அசாத்திய திறமையையும் வேகத்தையும் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். அயன்பாக்ஸ் முதல் பிரிட்ஜ் வரை பல்வேறு மின்சாதனங்களையும் தெளிவாகவும் விரைவாகவும் பழுது பார்க்கிறார். கொடுத்த 15 நிமிடத்தில் மிக்ஸியை பழுது நீக்கி தருவதால் தற்போது பொதுமக்கள் மட்டுமல்ல அப்பகுதியிலுள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகளின் விருப்ப தேர்வாக மாறியுளளார் சுரேஷ்.
வயர்களின் கலர்களை கண்டறிவில் சிரமம் இருப்பதை போன்றே, சுரேஷூக்கு புதிய ரூபாய் நோட்டுகளை கண்டறிவது கடினமாகியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மாற்றத்தால் கியூ.ஆர் கோடு மூலம் பணம் அனுப்புவதால் எவ்வளவு அனுப்பிகிறார்கள் என்பதை சுரேஷால் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறிருக்க மோட்டார் காயில்களை சுற்றுவதையும் சிறப்பாக செய்கிறார். ரூபாய் நோட்டுகளை தெரிந்து கொள்ள பயிற்சி எடுக்க உதவ வேண்டும் என கூறும் சுரேஷ் தனக்கு அரசு ரேசன் அட்டை வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
சுரேஷ்குமாருக்கு உறுதுணையாக பொருட்களை பழுது நீக்க கொலம்பஸ் மற்றும் வினோத் இரு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் அவரது தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். கடைகளில் சென்று மின் பொருட்கள் வாங்கி கொடுப்பது மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடன் உடன் இருந்து மற்ற பணிகளையும் கவனிக்கின்றனர். குடிசை வீட்டில் இசையுடன் வாழும் சுரேஷ், தன்னம்பிக்கை மிக்க பயணத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதரணமாக இருப்பதோடு, தான் உயர்ந்தால், தன்னைப் போல பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதை தடுத்து தனக்குத் தெரிந்த எலெக்ட்ரிக்கல் பணியை கற்றுத் தருவேன் என கூறி மெய்சிலிர்க்க வைக்கிறார் சுரேஷ்.
கோவையிலிருந்து ஒளிப்பதிவாளர் ரமேஷூடன் செய்தியாளர் மாரியப்பன், நியூஸ் 7 தமிழ்….











