மணிப்பூர் வீடியோ விவகாரம்; நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்பு உடை அணிந்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்பு உடை அணிந்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் இருந்தே மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், 5-வது நாளான நேற்று அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை மக்களவைச் செயலாளர் நாயகத்திடம் வழங்கினார். இதனை விவாதத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்தார்.

6-வது நாளான இன்று கூட்டம் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற வளாகத்தில் 26 கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணி  எம்பிக்கள் கருப்பு உடை அணித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.