மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாட்டின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்த எல்.முருகனுக்கு, கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, அவர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பாஜகவை சேர்ந்த செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை, செல்வகணபதியிடம், அதிகாரி முனிசாமி வழங்கினார்.







