குமுதம் வார இதழின் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் மாரடைப்பால் இன்று காலமானார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான பிரியா கல்யாணராமன், தனது 21-வது வயதிலேயே குமுதம் இதழில் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த இவர், குமுதம் இதழின் ஆசிரியராக உயர்ந்தார். இதனிடையே, தனது 56-வது வயதில் சென்னையில் இன்று காலமானார்.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் பிரியா கல்யாணராமனின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், குமுதம் நிறுவனப் பணியாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “குமுதம் வார இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பிரியா கல்யாணராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். பத்திரிகைத் துறையில் புதுமைகளைப் புகுத்திய ஆசிரியராகவும், ஆன்மிகம், வாழ்வியல் உள்ளிட்டவற்றில் ஏராளமான புத்தகங்களை எழுதியவராகவும் திகழ்ந்த பிரியா கல்யாணராமனின் மறைவு தமிழ் பத்திரிகை உலகிற்கு இழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/TTVDhinakaran/status/1539567595648876545








