முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

குடியரசு தலைவர் தேர்தல்: எளிய மக்களை முன்னிறுத்தும் பாஜக


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

ஜனநாயக நாட்டின் அதிகாரம் மிக்க பதவிக்கு சாமானியனை கொண்டு வந்து அமர்த்துவது தான் சுதந்திர இந்தியாவின் கடை கோடி மக்களின் கனவு. சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் இந்த கனவைத் தான் கண்டார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தில், தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவர் நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்படுவது நடைமுறை. பிரதமர் பதவியே மக்களால் உருவாக்கப்படும் அதிகார அமைப்பில் உச்சபட்ச பதவி. இருந்தாலும் கூட, ஆங்கிலேயர்களின் வழியில், குடியரசு தலைவரே அதிகாரம் கொண்ட அமைப்பாக பார்க்கப்படுகிறார். இந்த அதிகார பீடத்தில், பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த பிரிவினைச் சேர்ந்தவர்களும், வசதி படைத்த குடும்ப பின்னணியைக் கொண்டவர்களும் அமர்த்தப்படுவதாக விமர்சனங்கள் இருந்தன.

அடையாள அரசியல் சிக்கலில் குடியரசு தலைவர் பதவி:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜாகீர் உசேன் போன்ற சிறுபான்மை இஸ்லாமிய பின்னணி கொண்டவர்கள் குடியரசு தலைவராக அமர்த்தப்பட்டாலும், அந்த காலத்தில் அது மிகப்பெரிய அடையாள அரசியலாக பார்க்கப்படவில்லை. 1997ல் கே.ஆர். நாராயணன் இந்தியாவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அடையாள அரசியல் என்பது குடியரசு தலைவர் தேர்தலில் வெளிப்படையாகவே தெரிய வந்தது. அதாவது, இந்தியாவின் விளிம்பு நிலையில் இருக்கும், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அமர வேண்டும் என்பது வாக்கரசியலில் அவ்வப்போது பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசியல் செய்கிறது என்று விமர்சிக்கப்பட்ட போது தான், அப்துல் கலாம் குடியரசு தலைவராக ஆக்கப்பட்டார். பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை சுதந்திர இந்தியா இதுவரை காணாதது அவலம் என்ற விமர்சனம் முன்னெழுப்பப்பட்ட போது தான் பிரதீபா பட்டில் குடியரசு தலைவராக்கப்பட்டார். எதிர்க்கட்சியாக இருந்த போதே பழங்குடியினத்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்திய கட்சிதான் பாஜக. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா தான் அசாமைச் சேர்ந்தவரும், காங்கிரசில் கோலோச்சி பின்னர் தேசியவாத காங்கிரசில் இருந்த பி.ஏ. சங்மாவை முன்மொழிந்தார். காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜியை எதிர்கொண்ட பி.ஏ. சங்மா சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். என்றாலும் பாஜகவின் முன்முயற்சி அப்போதே பாராட்டைப் பெற்றது.

பாஜக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற விமர்சனம் எழும் போது ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக்கப்பட்டார். ஒரு வகையில், சமூகத்தின் குரலை அதிகார மையத்தில் இருப்பவர்கள் கேட்கிறார்கள், அல்லது மக்களின் கருத்துக்களுக்கு ஆட்சியில் இருப்பவர்கள், செவி கொடுக்கிறார்கள் என்று இதனை புரிந்து கொள்ளலாம்.

எளிய குடியரசு தலைவரை கண்டுபிடிக்காத எதிர்க்கட்சிகள்:

தற்போது, குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் – பாஜக முன்னிறுத்திய வேட்பாளர்களை கூர்ந்து கவனித்தால், அதில் ஒரு அரசியல் வெளிப்படுகிறது. குடியரசு தலைவராக பழங்குடி இன மக்களின் பிரதிநிதி திரௌபதி முர்முவை பாஜக முன்னிறுத்தி உள்ளது. பெரும்பான்மை அடிப்படையில் பாஜக முன்மொழியும் வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது வெளிப்படை. ஆனாலும், கூட மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் ஒருமித்து வெளிப்படுத்த தயங்கிவிட்டனவா என்ற கேள்வி எழுகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். ஆனால், எளிய பின்னணி கொண்டவரா என்றால் இல்லை. ஆனாலும், அவரை ஏன் எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்தன என்பதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைவரும் கேட்கும் கேள்வி.
பாஜக தாங்கள் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் செய்கிறது என்றும். முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற ஒன்றிரண்டு நபர்களைத் தாண்டி மோடியின் அமைச்சரவையில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்றும். உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களை பாஜக வேட்பாளராக கூட அறிவிக்கவில்லை என்றும். பாஜக ஒரு உயர் சமூக மக்களின் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் கட்சி என்ற விமர்சனங்கள் எல்லாம் எழும் போது, இதற்கு செயலால் விடை சொல்லியுள்ளது பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பு. இந்த இடத்தில், பாஜக மீது எதிர்க்கட்சிகள் வைத்த இத்தனை விமர்சனங்களையும் சுய பரிசோதனை அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் குடியரசு தலைவர் பொது வேட்பாளர் பட்டியலில் ஏன் காங்கிரஸ் செய்யவில்லை என்பது தான் கேள்வி? பழங்குடியின மக்களின் பிரதிநிதியாக திரௌபதி முர்முவை குடியரசு தலைவராக்கும் பாஜக திட்டம் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், இந்திய சமூக கட்டமைப்பில், விளிம்பு நிலையில் இருக்கும், மக்களுக்காக உண்மையிலேயே போராடும், மக்களின் குரலாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொது வேட்பாளரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் முன்னிறுத்தவில்லை? என்ற கேள்வி தான் எழுகிறது. காரணம், பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில், பாஜகவின் நிர்வாக நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்துவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்காக சட்டத்தை தங்களுக்கு ஏற்ப பாஜக வளைக்கிறது என்றும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய அத்தனைக்கும் விடை காணும் வகையில் ஒரு எளிய பின்னணி கொண்ட குடியரசு தலைவர் வேட்பாளரை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்ந்தெடுக்காதது ஏன்? யஷ்வந்த் சின்ஹா அரசியல் அனுபவம் கொண்டவர். ஆனால் அவரும் கூட பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து பலனடைந்தவர் தான். பின்னர் தமதுக்கு பாஜகவில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத சூழலில், பாஜக எதிர்ப்பு புள்ளியில் சமீப காலமாக தீவிரமாக இருக்கிறார். அவர் உயர் சமூக பின்னணி கொண்டவர் என்ற காரணங்கள் மட்டும் தானே தற்போது எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் எதிரொலிக்கிறது. இது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுவரை பாஜக மீது வைத்த விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுவரை புரிந்து கொள்ளவில்லை.

மாறவில்லையா காங்கிரசின் பெரியண்ணன் மனநிலை?:

சில நாட்களுக்கு முன்பாக “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” என்ற தலைப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார். அதில், அவர் பேசிய பல விஷயங்கள் புதிய சிந்தனையாக பார்க்கப்பட்டது. அதாவது, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை விடுவிக்க இந்திய அரசுக்கு எதிராக ஒரு பெரிய ‘வெகுஜன நடவடிக்கை’ அவசியம் என ராகுல் காந்தி பேசினார். பாஜகவுக்கு எதிராக அரசியல் மீள் நடவடிக்கையில் ஈடுபடும் மாநில கட்சிகள், இந்தியாவில் நடப்பது வெறும் அரசியல் சண்டை அல்ல அது கண்ணுக்கு தெரியாத அமைப்புகள் மூலமாக பாஜக நடத்தும் அரசியலுக்கு எதிரான சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். உதய்பூர் மாநாட்டிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி பல சீர்திருத்த நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அதாவது, பாஜக எதிர்ப்பை தனி அமைப்பாக இல்லாமல், அதை, வெகுஜன மக்கள் திரள் எழுச்சி மூலமாக கட்டமைக்க வேண்டும் என்ற முடிவை கோரியுள்ளது. காங்கிரஸ் கட்சி அடிப்படையில் இந்த மாற்றத்தை அதன் வேர்களுக்குள் சென்று வெகுஜன நடவடிக்கைகள் நோக்கி நகரத் தொடங்கும் வகையில் கட்டமைப்பதாக அறிவித்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏறக்குறைய முன்னோட்டமாகவே இந்த குடியரசு தலைவர் தேர்தல் பார்க்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில் எடுக்கப்பட்ட முடிவை ஒட்டியோ, ராகுலின் கேம்ப்ரிட்ஜ் உரையின் அடிப்படையில் சிந்தித்திருந்தால் கூட மக்களின் பிரதிநிதித்துவ அடிப்படையிலான ஒரு வேட்பாளரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கூட்டணி முகாம்கள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், அதனை செய்ய காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

எளிய மக்களை முன்னிறுத்தும் பாஜக:

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வாக்கரசியல் அல்லது அடையாள அரசியல் தலைவிரித்தாடுகிறது என்று எவ்வளவு விமர்சித்தாலும் கூட அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த், தற்போது, திரௌபதி முர்மு வரை பாஜக தங்களின் வெற்றி வியூகமாக எளியோரை தெரிவு செய்கிறது. திரௌபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக பதவியேற்பார். அந்த அடிப்படையிலேயே திரௌபதி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா குறிப்பிடுகிறார். அதே போல் திரௌபதி முர்முவின் தேர்வை புகழ்ந்துரைத்த பிரதமர் நரேந்திர மோடியும், தனது வாழ்க்கையையே ஒதுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்துக்கொண்டவர் முர்மு என்று குறிப்பிட்டார். அதே போல் வறுமையையும், துயரங்களையும் அனுபவித்த லட்சோபலட்சம் மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டுபவராக முர்மு திகழ்வதாக பிரதமர் புகழாரம் சூட்டினார். அவருடைய கருணைமிக்க அணுகுமுறையும், கொள்கைப் புரிதலும் தேசத்திற்கு பெரும் பலனளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் பாஜக எளிய மக்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்துவதில் மிகத் தீவிரமாக இருக்கிறது. மத்தியில் பல காலம் ஆண்ட காங்கிரசை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, குறைந்த காலமே நாட்டை ஆண்டு வரும் பாஜக, பொது வேட்பாளரான கலாமைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் என்ற பட்டியலினத்தவரையே குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது. இப்போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்முறையாக குடியரசுத் தலைவர் அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.
ஆனால், வாக்கரசியல், அடையாள அரசியலுக்காக கூட நாட்டை பல காலம் ஆண்ட காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டை முன்பு எடுக்கவில்லையோ அல்லது எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் மக்கள் பிரதிநிதிகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏர் இந்தியாவின் மெகா பிளான் – 300 ஜெட் விமானங்களை வாங்க முடிவு

Mohan Dass

தமிழகத்தில் ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா!

Halley Karthik

‘டவ்-தே’ புயல்: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!