குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் அருகே கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த 1-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மே11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து, இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான கெங்கையம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கோயிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தேரில் வைக்கப்பட்டது. பின்னர், தேர் கெங்கையம்மன் கோயிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு தேர் மீது துவி வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். வேலூர் எஸ்பி மணிவன்னன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு! விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு!
இதையடுத்து, இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சிரசுப் பெருவிழா இன்று நடைபெற்றது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு,கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.









