தஞ்சை மாவட்டம், கஞ்சனூர் செல்வவிநாயகர் கோயிலில் மகா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் அருள்மிகு செல்வ
விநாயகர் கோயிலில், மகா குடமுழுக்கு பெருவிழா கடந்த 21 ஆம் தேதி
விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, கஞ்சனூர் வட காவிரி
ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், புனித
நீர் கலசங்கள் யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மேலும், கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில்
வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சிவாச்சாரியார்களின்
வேதமந்திரங்களுடன் தேவார திருவாசக பதிகங்களுடன், நான்கு கால யாக
பூஜைகளும் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வர,
தவில் கலைஞர்கள் ஒரே நேரத்தில் மல்லாரி இசைத்திட, புனித நீர் கலசங்கள்
புறப்பட்டு கோயிலின் மூலவ விமானங்களுக்கு மகா குடமுழுக்கு நடந்தது.
தொடர்ந்து, கோயிலின் மூலவரான செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும்,
ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம், 24 வது குருமகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திருமுன்னர் கோவிந்தபுரம்
விட்டல் ருக்மணி சமஸ்தான் கோயில் நிர்வாகி ஸ்ரீ லஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சுவாமிகள்,
கோவை மகாதேவ் மகா சமஸ்தானம் ஸ்ரீ யுத்தேஸ்வராநந்த சுவாமி, திருவாவடுதுறை ஆதின கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள், உள்ளிட்டோர் பங்கேற்க மகா குடமுழுக்கு திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இன்று மாலை பிரமாண்ட புஷ்ப பல்லக்கில் நாதஸ்வர மேத
தாளங்களுடன், வான வேடிக்கைகள் முழங்க திருவீதியுலா காட்சி நடக்கிறது.
கு. பாலமுருகன்







