சந்திரயான் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 17 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என திக் விஜய் சிங் முன் வைத்த கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. லேண்டரை தரையிறக்கும் பணகள் இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அரசு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள் : சந்திரயான் ஒருபக்கம்… சதுரங்க நாயகன் பிரக்ஞானந்தா மறுபக்கம்… சாதனைகளை நோக்கி இந்தியா…
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் சந்திரயான் திட்டம் பற்றி பலரும் பாராட்டி வரும் அந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 17மாதங்களாக சம்பளம் பாக்கி வைத்துள்ளது வருத்தத்திற்குரியது. அதனை பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்தி நிவர்த்தி செய்ய வெண்டும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்தக் கூற்றை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா “ சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்கும் நேரத்தில் திக் விஜய் சிங்கின் இந்த உண்மைக்கு புறம்பான கூற்று அருவருப்பாக உள்ளது. இந்தியப் பிரதமர் மோடியை வெறுப்பதின் அடையாளமாக காங்கிரஸின் இந்த கருத்தை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையும் படியுங்கள் : சந்திரயானும்…தமிழர்களும்…!!
சந்திரயான் திட்டத்தில் பணி புரியும் பணியாளர்கள் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கருத்தைப் போலவே அரசியல் ஆய்வாளரும், தொழில்முனைவோருமான தஹ்சீன் பூனவாலா பாட்காஸ்ட் தளத்தில் பேசும்போது இஸ்ரோவில் பணிபுரிபவர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் போடப்படவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் சம்பள பாக்கி தொடர்பான கருத்துக்களை பத்திரிக்கை தகவல் அலுவலகம் வழியாக மத்திய அரசு மறுத்துள்ளது.







