லாரன்ஸுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா!

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் KPY பாலா ஆகிய இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும்…

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் KPY பாலா ஆகிய இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர்.

மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பல காலமாக தொடர்ந்து செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். அதேபோல சமீப காலமாக பல சமூகப் பணிகளை சின்னத்திரை நடிகர் பாலா ஆற்றி வருகிறார். பொதுமக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவிந்து வருகின்றது.

இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளியில், பல காலமாக மாணவர்கள் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தர வேண்டுமென்றும், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : “அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

இதை அறிந்த KPY பாலா, அந்த பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க உடனடியாக ரூ.5 லட்சம் முன்பணம் அளித்துள்ளார். கூடுதல் தொகை தேவைப்பட்ட நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸை பாலா அணுகியுள்ளார். உடனடியாக உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ், பாலாவை பாராட்டியதுடன், உதவிப்பணிகளை தானும் இணைந்து செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கான கழிப்பறை வசதிக் கட்டிடத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. அப்பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் ராகவா லாரன்ஸ் மற்றும் KPY பாலாவைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.