கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.50-ஆக குறைந்த தக்காளி விலை!!

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது…

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மூன்று பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம் இருந்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வருகிறது. இதனால் தக்காளி பயன்பாட்டிற்கு உள்நாட்டு விளைச்சல் மற்றும் வெளிமாநில வரத்தை நம்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 800 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது வழக்கத்தைவிட தக்காளி வரத்து 300 டன்னாகக் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 100 ரூபாயை தொட்டு, நேற்று தொடர்ச்சியாக கிலோவுக்கு 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இதனை தொடர்ந்து புதன்கிழமையான இன்று வரத்து அதிகரித்ததால் சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்தது. சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து ரூ.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில், இன்று 700 டன் வந்துள்ளது. வரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் இன்னும் 4 நாட்களுக்குள் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது .

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.