வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான முழு விவரங்களையும் அரசுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், உடல் வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருந்தால் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பின்னர், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான, மே 1-ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து அரசுதான் முடிவெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.







