கோமாளி பட இயக்குநரின் அடுத்தப் படத்துக்கு விஜயின் படத் தலைப்பை வைத்துள்ளனர்.
இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில் நடிகர் விஜய், சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரண் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான படம் லவ் டுடே. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரித்திருந்த இந்தப் படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றியைப் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு இதே பெயரில் இன்னொரு படம் வெளியாக உள்ளது.
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரமாக நடிப்பதும் பிரதீப் தான். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்தப் படத்துக்கு லவ் டுடே என பெயர் வைக்கத் திட்டமிட்டனர். ஆனால், ஏற்கனவே அந்தப் பெயரில் படம் வெளியாகி இருப்பதால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியை அணுகியுள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆர்.பி. சௌத்ரி லவ் டுடே தலைப்புக்கு அனுமதி வழங்கிவிட்டார். தலைப்பு கிடைத்த கையோடு ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். முக்கியமாக லவ் டுடே டைட்டில் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு ஏ.ஜி.எஸ் நிறுவனம் மற்றும் பிரதீப் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
A heartfelt thank you to @superGoodfilms_#RBChoudary Sir and our #Thalapathy Vijay Sir for giving us this title ❤️. It is such a big strength to our film and we could not have asked for a better one #Ags22 @pradeeponelife
— Archana Kalpathi (@archanakalpathi) July 3, 2022
இதனிடையே, கடந்த 2014ம் ஆண்டு பிரதீப் ரங்கராஜன் ட்விட்டரில் விஜயை கலாய்த்த போட்ட பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. ‘வாழ்க்கை ஒரு வட்டம் பிரதீப். அன்று கலாய்த்து விட்டு, இன்று அவருக்கே நன்றி சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.” என்று விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பிரதீப்பை விமர்சனம் செய்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








