கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் மேலும் இருவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றக் கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் காரணமாக கடும் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இச்சம்பத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அதில், 3 பேர் தேர்வு முகமைப் பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இச்சம்பவம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள தேசிய தேர்வு முகமை தனிக்குழு அமைத்துள்ளது. இந்தக் குழு இச்சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








