முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய கொல்கத்தா அணி வீரர் – ஐபிஎல் தொடரில் புதிய சாதனை

உள்ளூர் போட்டிகள் எதிலுமே விளையாடமல் ஐபிஎல் போட்டியில் நேரடியாக கலந்து கொண்டு முதல் போட்டியிலேயே மாஸ் காட்டியுள்ளார்  கொல்கத்தா அணி வீரர் சுயாஸ் ஷர்மா. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 31ம் தேதி…

உள்ளூர் போட்டிகள் எதிலுமே விளையாடமல் ஐபிஎல் போட்டியில் நேரடியாக கலந்து கொண்டு முதல் போட்டியிலேயே மாஸ் காட்டியுள்ளார்  கொல்கத்தா அணி வீரர் சுயாஸ் ஷர்மா.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற அணி பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆகியோர் களமிறங்கினர். ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சர் என நாலாபுறமும் பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.   20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 204 ரன்கள் இலக்குடன்  பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலி 21 ரன்களில் வெளியேற, தொடர்ந்து டூ பிளசிஸ் 23 ரன்களும், அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 5 ரன்னும், ஹர்சல் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமலும், மிட்செல் பேரேஸ்வெல் 19 ரன்களும், அனுஜ் ராவத் 1 ரன்னும், தினேஷ் கார்த்திக் 9 ரன்னும், கரண் சர்மா 1 ரன்னும், ஆகாஷ் தீப் 17 ரன்களும் எடுத்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் பெங்களூரு அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் 19 வயதான சுயாஸ் ஷர்மா பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களான தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவட் மற்றும் கரண் ஷர்மா ஆகியோரை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். சுயாஸ் ஷர்மா 4 ஓவர்களை வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆச்சர்யம் என்னவெனில் சுயாஸ் ஷர்மா விளையாடும் முதல் ஐபிஎல் இதுதான்.

கொல்கத்தா அணியில் இம்பெக்ட் வீரராக 20 லட்சம் ஏலத்திர்கு எடுக்கப்பட்ட சுயாஸ் ஷர்மா இதுவரை லிஸ்ட் ஏ, டி20 போன்ற எந்த உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் இல் விளையாடுகிறார் என்பதால் அவரை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்கின்றனர்.

சுயாஷ் சர்மா இதுவரை டென்னிஸ் பந்து போன்ற கிளப் அளவிலான கிரிக்கெட்டில் மட்டுமே கணிசமாக விளையாடிய அனுபவத்தை பெற்றவர்.  ஐபிஎல் தொடருக்கு முன்பாக கொல்கத்தா அணி நிர்வாகத்தின் சார்பில்  உள்ளூர் வீரர்கள் தேர்வு செய்யும் முகாம் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை சுயாஸ் ஷர்மா வெளிப்படுத்தியுள்ளார். கொல்கத்தா அணியின்  பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் சுயாஸ் ஷர்மாவை தேர்வு செய்து இந்த போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

லிஸ்ட் ஏ, டி20 போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடாமலேயே நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கி தனது முதல்  போட்டியிலேயே சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பந்து வீச்சாளர் என்ற  புதிய சாதனை சுயாஸ் ஷர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய சிவம் சர்மா தன்னுடைய அறிமுக போட்டியிலே பெங்களூருக்கு எதிராக 26 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை சுயாஸ் ஷர்மா முறியடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.