ஐதராபாத்தில் பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஷீர்பாக் சந்திப்பு சிக்னலில், நேற்று முன்தினம் இரவு சைரன் ஒலித்தபடி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை அழைத்து செல்வதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவலர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆனால், சிக்னலைத் தாண்டி சிறிது தொலைவில் வேகமாக வந்த அந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. இதனை கவனித்த போக்குவரத்து காவலர் ஆம்புலன்ஸ் அருகே சென்று பார்த்த போது, ஓட்டுநர், இரு செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அங்குள்ள கடையில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அந்த போக்குவரத்து காவலர் நடத்திய விசாரணையில் ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லை எனவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சைரன் போட்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து காவலர், விதிகளை மீறிய குற்றத்துக்காக ஓட்டுநருக்கு ரூ.1,000 அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து தெலங்கானா டிஜிபி இந்த சம்பவம் குறித்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.







